Enai Noki Paayum Thota Movie Review | எனை நோக்கி பாயும் தோட்டா விமர்சனம்Minnambalam.com
Updated : Nov 30, 2019 13:38
|
Editorji News Desk
ஜோசியம், ஜாதகம் ஆகியவற்றில் நம்பிக்கை இல்லாமல் வாழ்ந்துவரும் கேரக்டர் ரகு. அம்மாவின் விருப்பத்துக்காக ஒருமுறை ஜோசியர் ஒருவரிடம் தனது கையை காட்டுகிறார். அவரோ, ‘90 வயசு வரைக்கும் நீ நீடூடி வாழ்வாய்’ என்று ஜோசியம் சொல்லிவிடுகிறார். இதைப்பற்றி ரகு கவலைப்படாமல் வாழ்ந்து வரும்போது, அவரது உயிருக்கு ஆபத்து வரவழைக்கக்கூடிய சூழல்களை உருவாக்கும் இரண்டு கேரக்டர்கள் அவர் வாழ்க்கையில் வருகின்றன. ஒன்று அவரது காதலியாக வரும் லேகா; மற்றொன்று அவரது அண்ணன் திருமால். கௌதம் மேனனின் வழக்கமான படங்களைப் போல பொறியியல் கல்லூரி மாணவனாக ரகு. அந்த கல்லூரியில் ஒரு படமெடுக்க வரும் யூனிட்டின் ஹீரோயின் லேகா, கொடுமை செய்யும் தத்துத் தகப்பனின் பேராசைக்காக நடிகையாக மாறியவர். அவருக்கான இளைப்பாறுதலாக ரகு கிடைக்க, வாழ்வில் வசந்தம் மலர்கிறது. விசிறி பாடலின் பின்னணியில் ரகுவின் குடும்பம் கொடுக்கும் மகிழ்ச்சி உலகையே மறக்கவைக்கிறது. திடீரென தத்து தகப்பன் லேகாவைத் தேடிவர, காதலனின் குடும்பத்துக்கு எந்தப் பிரச்சினையும் வராமல் காப்பாற்ற தத்து தகப்பனுடன் சென்றுவிடுகிறார் லேகா. ரகுவின் வாழ்க்கையில் 4 வருடங்கள் கடந்ததும் லேகாவின் ஃபோன் வருகிறது. “நான் உன் அண்ணன் கூட தான் இருக்கேன். அவருக்கு பிராப்ளம் கிளம்பி வா” என்கிறார் லேகா. அங்கு செல்லும் ரகுவுக்கு எப்படியெல்லாம் மரணத் தருணங்கள் ஏற்படுகிறது என்பது மீதி கதை. கௌதம் மேனன் காதல்-ஆக்ஷன் கலந்த படங்களை எடுக்க நீண்ட காலமாக முயற்சித்து வருகிறார். ஆனால், அதில் முழுமையடையும் தருணம் இதுவரை வாய்க்கவில்லை. முதல் பாதியில் வரும் காதல் காட்சிகளில், ‘இதான் கௌதம் மேனனின் ஸ்டைல்’ என காலரைத் தூக்க வைப்பவர், இரண்டாம் பாதியில் வரும் சஸ்பென்ஸ்-திரில்லரில் காலருக்குள் ஒளிந்துகொள்ள வைக்கிறார் என்று சொல்லவைக்கும் அளவுக்கு சோதிக்கிறார். தனுஷ், ரகு கேரக்டரில் அசத்தியிருக்கிறார். ‘எந்த கேரக்டரா இருந்தாலும் இந்த பையன் பண்ணுவான்’ என்று சொல்லும் அளவுக்கு வயதை மறைக்கும் கலைஞனாக தனுஷ் தன்னை வளர்த்துக்கொண்டிருப்பது தமிழ் சினிமாவுக்கு வரம் என்றே சொல்லவேண்டும். காலேஜ் பையனாகவும், சீரியஸ் ஹீரோவாகவும் தன்னை மாற்றிக்கொள்ளும் சமயத்தில் தனுஷ் ஒரு புதுக் கலைஞன். லேகா கேரக்டரில் மேகா ஆகாஷ் சிறப்பு. அதிக வசனம் இல்லையென்றாலும், பார்வையாலும் சிரிப்பாலுமே ‘இது போதும் மேடம்’ என்று சொல்லவைக்கிறார். குறிப்பாக குளோஸ்-அப் காட்சிகளில் லேகா ஏற்படுத்தும் பாதிப்பு, அவருக்கு பல ஆர்மிகளை இனியும் உருவாக்கும். மிக முக்கியமானவர் தர்புகா சிவா. மறுவார்த்தை பேசாதே பாடல் சில வருடங்களுக்கு முன்பு ரிலீஸானபோது ‘மிஸ்டர் எக்ஸ்’ என்று அறிமுகப்படுத்தப்பட்டு, பின்னாளில் இளைஞர்களின் இதயத் துடிப்புகளுக்கிடையில் சிக்கிக்கொண்ட பெயர் தர்புகா சிவா. ஒவ்வொரு பாடலையும் ரிபீட் கேட்கும் அளவுக்கு உழைத்திருக்கிறார். சசிகுமார் வந்தார், சென்றார். நடிப்பிலோ, கதையின் போக்கிலோ பெரிய அளவுக்கு பாதிப்பை ஏற்படுத்தவில்லை. சிறப்புத் தோற்றத்தில் நடித்த ராணா டகுபதிக்கு நன்றி சொன்ன கௌதம் மேனன், இவருக்கும் சொல்லியிருக்கலாம். ஆனால், எதனாலோ படத்தின் ஒரு நடிகராக போட்டுவிட்டார். கௌதம் மேனன் என்ற ‘காதல் காட்சிகளின் அசுரன்’ இந்தப் படத்திலும் விளையாடியிருக்கிறார். அந்த ரசிகத்தனத்துக்கு மாற்று இதுவரை தமிழ் சினிமாவில் வரவில்லை. காதலை வெளிப்படுத்தும் காட்சிகளை படமாக்கும் விதத்தில் அவரது அடையாளமே தனி. ‘ஐயோ, அம்மா திட்டுவாங்க’ என்ற ரீதியில் ஹீரோ கேரக்டர்களை வைத்திருந்த கௌதம் மேனன், இந்தப்படத்தில் அடுத்த கட்டத்துக்கு சென்றுவிட்டார். கௌதம் மேனனின் காதலைக் கொண்டாட நிறைய இடங்கள் இந்தப் படத்தில் இருக்கின்றன. அதேசமயம், இன்னும் எத்தனை நாளைக்கு ‘பொண்ணுங்க ஒரு ஸ்டெப் எடுத்து வெச்சா பசங்க 3 ஸ்டெப் எடுத்து வைக்கணும்’ என்பது போன்ற ஆணாதிக்க வசனங்களை வைத்தே ஓட்டப்போகிறார் என்று கேட்கத் தோன்றுகிறது. ஆனால், கேட்க வேண்டாம். ஏனென்றால், படத்தில் நடைபெறும் எதுவும், ஒரு சாதாரண மனிதனின் வாழ்க்கையில் நடைபெறுவதற்கான வாய்ப்பே இல்லை. ஏதோவொரு கனவுலகத்தில் வாழ்வது போல அந்த இரண்டு மணிநேரம் 40 நிமிடங்களை கழித்துவிட்டு கடந்துவிட வேண்டும். கௌதம் மேனனின் எனை நோக்கிப் பாயும் தோட்டா படத்தின் மீதான வருத்தம் என்றால், முதல் பாதியில் கொடுத்த மகிழ்ச்சியை இரண்டாம் பாதியில் புடுங்கிட்டீங்களே சார் என்பதாகவே இருக்கும். -சிவா
Recommended For You